Site icon Cinema Spice Entertainment

பைரஸி உலகின் அசுரன்: யூ-ட்யூபில் ஹேக்கிங் கற்று இந்திய சினிமாவைத் தெறிக்கவிட்ட 21 வயது பீகார் இளைஞன் கைது!

Movie Piracy Hacker Arrest

இந்தியத் திரையுலகையே அதிர வைத்த ஒரு பிரம்மாண்ட திரைப்படப் பைரஸி நெட்வொர்க்கை ஹைதராபாத் காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு சமீபத்தில் உடைத்தெறிந்துள்ளது. இந்த நெட்வொர்க்கின் முக்கிய மூளையாகச் செயல்பட்ட அஸ்வனி குமார் என்ற 21 வயதுப் இளைஞன் பாட்னாவில் உள்ள ஒரு ஆடம்பரமான டூப்ளக்ஸ் வீட்டில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

போலீஸ் சோதனையில், அவரது வீட்டில் இருந்து கணினிகள், சர்வர்கள் மற்றும் ஏராளமான ஹேக்கிங் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

யூ-ட்யூப் பார்த்து ஹேக்கர் ஆன கதை

இந்தச் சிறுவனைப் பற்றி போலீஸ் கொடுத்த தகவல்கள் சினிமாக்காரர்களையே உறைந்துபோக வைத்திருக்கிறது. அஸ்வனி குமார் எந்தப் பெரிய தொழில்நுட்பக் கல்லூரியிலும் படிக்கவில்லை. அவர் யூ-ட்யூப் வீடியோக்கள் மூலமாகவே ஹேக்கிங் மற்றும் சர்வர் மேலாண்மை நுட்பங்களைக் கற்றிருக்கிறார்.

அவர் ஜாவா மற்றும் பைத்தான் மொழிகளைக் கற்று, அதை வைத்து மால்வேர் இன்ஜெக்‌ஷன் மற்றும் பல்வேறு ஸ்கிரிப்ட் ஹேக்கிங் முறைகளைப் பயன்படுத்தி இருக்கிறார். இந்தத் திறமையைக் கொண்டுதான், விநியோக நிறுவனங்களின் சர்வர்களை ஹேக் செய்து புதுப் படங்களைத் திருடியிருக்கிறார்.

கோடியில் புரண்ட பைரஸி பிசினஸ்

விசாரணையில், இந்த இளைஞன் 135 படங்களுக்கும் மேல் லீக் செய்திருப்பது தெரியவந்துள்ளது. புஷ்பா 2, கேம் சேஞ்சர், குட் பேட் அக்லி மற்றும் பல ஹிந்திப் படங்கள் முதல் நாளே ஹெச்.டி-யில் வர இவரே காரணம்.

சர்வரில் இருந்து திருடப்பட்ட படங்களை, பைரஸி இணையதளக்காரர்களுக்கு ஏலத்தில் விட்டிருக்கிறார். ஒரு படத்துக்கு சுமார் $800 டாலர் (இந்திய மதிப்பில் ₹66,000-க்கும் மேல்) எனச் சம்பாதித்துள்ளார். டெலிகிராமில் ஒரு படத்துக்கு $135 டாலர் வாங்கியிருக்கிறார். மொத்தத்தில், இவர் கோடிக் கணக்கில் சம்பாதித்துள்ளார்.

இந்த வழக்கில், பிரபல பைரஸி இணையதளமான ‘தமிழ்ப்பிளாஸ்டர்ஸ்’ அட்மினான சிரில் ராஜ் என்பவரும் சிக்கியுள்ளார். அவர் மொத்தமாக ₹5 கோடி சம்பாதித்திருப்பதாகவும், மாதத்திற்குச் சுமார் ₹9 லட்சம் கிரிப்டோ பணமாகச் சம்பாதித்ததாகவும் போலீஸ் தகவல் தெரிவிக்கிறது.

நெட்வொர்க்கை விளக்கிய ஹேக்கர்

சினிமா விநியோக நிறுவனங்களின் இரண்டு பெரிய நெட்வொர்க் சர்வர்களை இவன் ஹேக் செய்திருப்பதாகப் போலீஸ் சொன்னபோது, அந்த நிறுவனங்கள் அதை மறுத்தனவாம். ஆனால், இவனை கைது செய்து விசாரித்தபோது, அந்த நிறுவனங்களின் சைபர் செக்யூரிட்டி ஊழியர்கள் முன்னிலையில், இவன் அந்த நெட்வொர்க்கின் கட்டமைப்பு (Network Structure) மற்றும் அதன் ப்ரோடோகால்கள் அனைத்தையும் படம் போட்டு விளக்கிக் காட்டியிருக்கிறான்.

அதைப் பார்த்தபின், அதிர்ச்சி அடைந்த விநியோக நிறுவனங்கள் வேறு வழியில்லாமல், “ஆமாம், ஹேக் ஆகிவிட்டது” என்று ஒத்துக்கொண்டுள்ளனர்.

பிடிபட்டது எப்படி?

இவர்கள் எல்லோரும் சிக்கியதுதான் இந்தக் கதையின் சுவாரஸ்யமான பகுதி. ஹைதராபாத் போலீஸ் உண்மையான பைரஸி ஆட்களைப் போலவே டீல் பேசி, கிரிப்டோகரன்சியில் பணம் அனுப்பி, அதைக் கொண்டே இவர்களைக் கையும் களவுமாக மடக்கிப் பிடித்திருக்கிறார்கள்.

இந்தக் கைதுக்குப் பின்னால், திரையுலகம் ஆட்டம் கண்டுள்ளது. சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, நாணி போன்ற பெரிய நடிகர்களை அழைத்து, பைரஸி திருட்டு எப்படி நடந்தது என்று போலீஸ் விளக்கிக் காட்டியதாம். அதைக் கேட்டு சினிமாத்துறையினர் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர். இதையடுத்து, சினிமா வட்டாரங்களில் உடனடியாக பேக்கப் மற்றும் டேட்டா பாதுகாப்பு குறித்த விவாதங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன.

விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது, இந்த நெட்வொர்க்கில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்றும் போலீஸ் தேடி வருகிறது.

Exit mobile version