Site icon Cinema Spice Entertainment

பாகுபலி 4K வெளியீடு: “புகழ் கூடினாலும் நான் இன்னும் அந்த பழைய கூச்ச சுபாவம் கொண்ட பையன் தான்” – பிரபாஸ் ஓபன் டாக்

Prabhas Baahubali Japan Visit

டிசம்பர் 5 அன்று, ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஒரு திரையரங்கம் “பாகுபலி ஜெய்!” என்ற கோஷத்தால் அதிர்ந்தது. காரணம், இந்திய சினிமாவின் பிரம்மாண்ட நாயகன் பிரபாஸ், ஜப்பானுக்கு மீண்டும் வருகை தந்ததுதான். வரும் டிசம்பர் 12-ம் தேதி ஜப்பானில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ள ‘பாகுபலி: தி எபிக் 4K’ (Baahubali: The Epic 4K) படத்தின் சிறப்புத் திரையிடலுக்காக, தயாரிப்பாளர் சோபு யர்லகட்டாவுடன் பிரபாஸ் அங்கு சென்றிருந்தார்.

சுமார் 10 ஆண்டுகளாகப் பாகுபலி மீதான தீராத அன்பை வெளிப்படுத்தி வரும் ஜப்பானிய ரசிகர்கள், “எங்கள் ராஜா.. ஜப்பானுக்கு உங்களை வரவேற்கிறோம்” என்ற பதாகைகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பைக் கண்டு நெகிழ்ந்துபோன பிரபாஸ், “கடந்த 10 ஆண்டுகளாக ராஜமௌலி சாரும், தயாரிப்பாளர் சோபு சாரும் உங்கள் அன்பைப் பற்றி என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இப்போது இந்தியாவைப் போலவே ஜப்பானும் எனக்குச் சொந்த நாடு போல ஆகிவிட்டது” என்று உணர்ச்சிபொங்கக் கூறினார்.

வெட்கப்படும் ராஜா

‘பாகுபலி’ படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்து, பிரபாஸை ஒரு பான்-வேர்ல்ட் ஸ்டாராக மாற்றியிருந்தாலும், மேடையில் அவர் மிகவும் இயல்பாகவே பேசினார். இந்தப் படம் உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றியது என்று கேட்டபோது, “தொழில் ரீதியாகப் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. மிகப்பெரிய அங்கீகாரமும் வெற்றியும் கிடைத்தது. எல்லா நடிகர்களுக்கும் வாழ்நாளில் ஒருமுறையாவது இப்படிப்பட்ட படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், தனிப்பட்ட முறையில் நான் துளியும் மாறவில்லை. இன்னும் என் பள்ளி நண்பர்களுடன் பழகும் அந்த பழைய கூச்ச சுபாவம் கொண்ட பையனாகவே (Shy Guy) நான் இருக்கிறேன் என்று அடக்கத்துடன் கூறினார். திரையில் ஆக்ரோஷமான மன்னனாக அவரைப் பார்த்த ரசிகர்களுக்கு, நேரில் அவரது இந்த எளிமையான குணம் இன்னும் பிடித்துப்போனது.

ஜப்பானியர்களுக்காக ஒரு புதிய வடிவம்

தயாரிப்பாளர் சோபு யர்லகட்டா பேசும்போது, இந்த ‘பாகுபலி: தி எபிக் 4K’ பதிப்பின் சிறப்பம்சங்களை விளக்கினார். இரண்டு பாகங்களாக வெளியான பாகுபலி திரைப்படத்தை, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி தனது சொந்த மேற்பார்வையில் எடிட் செய்து, ஒரே முழு நீளப் படமாக மாற்றியுள்ளார். “ஐந்தரை மணி நேரப் படத்தை, 3 மணி நேரம் 40 நிமிடங்களாகச் சுருக்கி, கதையோட்டம் மாறாமல் ஒரே படமாக ரசிக்கும்படி மாற்றியமைப்பது சவாலான விஷயம். இதை ஜப்பானிய ரசிகர்களுக்காகவே செய்துள்ளோம். இதில் கூடுதலாக ஒரு புதிய காட்சியும் சேர்க்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியபோது அரங்கம் கரகோஷத்தால் நிறைந்தது.

வலியும் வெற்றியும் – பிரபாஸின் வாக்குறுதி

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சிரமங்களையும் பிரபாஸ் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, படத்தில் வரும் அந்தப் பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சிக்கு மேலே ஏறும் காட்சியைப் படமாக்கும்போது, தனது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததாகத் தெரிவித்தார். “நூற்றுக்கணக்கான நாட்கள் உழைப்பு மற்றும் வலியின் பலனே இந்த வெற்றி” என்று அவர் குறிப்பிட்டார்.

இயக்குநர் ராஜமௌலி இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும், அவர் அனுப்பிய உணர்வுப்பூர்வமான கடிதம் மேடையில் வாசிக்கப்பட்டது. “எனது ‘பாகுபலி’ என் இரண்டாவது வீடான ஜப்பானுக்கு வந்துள்ளார். உங்கள் அன்பை அவர் நேரில் உணர்ந்தால், நிச்சயம் ஆனந்தக் கண்ணீர் விடுவார்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நிறைவாக, ரசிகர்களிடம் பேசிய பிரபாஸ், “பாகுபலி அனிமேஷன் சீரிஸ் விரைவில் வரவுள்ளது. அதற்காக அடுத்த வருடம் நான் நிச்சயம் ஜப்பான் வருவேன்” என்று வாக்குறுதி அளித்தார். டிசம்பர் 12-ம் தேதி முதல் ஜப்பான் திரையரங்குகளில் ‘பாகுபலி’ மீண்டும் கர்ஜிக்கத் தயாராக உள்ளது.

Exit mobile version