அவதார் 3: ஃபயர் அண்ட் ஆஷ் திரைவிமர்சனம் – ஒரு அழகான, ஆனால் களைப்பூட்டும் பயணம்!
‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ (Way of Water) படம் நம்மை நீலக் கடலின் ஆழத்திற்கு அழைத்துச் சென்று மூச்சுத்திணற வைத்தது என்றால், இந்த ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ (Fire and Ash) நம்மைப் புகைக்குள் தள்ளித் திணறடித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஜேம்ஸ் கேமரூனின் இந்தத் திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாகச் சிகரத்தைத் தொட்டிருந்தாலும், கதை என்று வரும்போது பழைய ஃபார்முலாவிலேயே சிக்கித் தவிக்கிறது.
கதைக்களம் என்ன? முந்தைய பாகம் எங்கே முடிந்ததோ, அங்கிருந்தே இந்தப் படம் தொடங்குகிறது. தங்கள் மூத்த மகன் நெட்யாமை இழந்த சோகத்தில் ஜேக் சல்லியும் (சாம் வொர்திங்டன்), நெய்திரியும் (ஜோ சல்டானா) இருக்கிறார்கள். அந்தத் துயரம் விலகும் முன்பே அவர்களுக்குப் புதிய ஆபத்து வருகிறது. இம்முறை ஆபத்து வானத்திலிருந்தோ கடலிலிருந்தோ வரவில்லை; அது நெருப்பிலிருந்து வருகிறது. ‘ஷ் பீப்பிள்’ (Ash People) எனப்படும் மூர்க்கமான, நெருப்பை வணங்கும் புதிய நாவி (Na’vi) இனத்தவர்கள் அறிமுகமாகிறார்கள். இவர்களின் தலைவி ‘வராங்’ மற்றும் மீண்டும் உயிரிற்று வந்துள்ள வில்லன் குாரிட்ச் ஆகியோரைச் சமாளித்து ஜேக் சல்லி தன் குடும்பத்தைக் காப்பாற்றினாரா என்பதுதான் கதை.
விஷுவல்ஸ் எப்படி இருக்கிறது? படத்தின் மிகப்பெரிய பலம் அதன் விஷுவல்ஸ் தான். இதில் ஜேம்ஸ் கேமரூனை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. எரிமலைக்குழம்புகள், சாம்பல் மூடிய மலைகள், பறக்கும் கப்பல்கள் என ஒவ்வொன்றும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளன. தியேட்டரில் 3டி கண்ணாடியுடன் பார்க்கும்போது, நாமே பன்டோரா கிரகத்தில் இருப்பது போன்ற உணர்வு கிடைக்கிறது. குறிப்பாக வானத்தில் நடக்கும் சண்டைக் காட்சிகள் மிரட்டல் ரகம். தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படம் ஒரு மாஸ்டர் பீஸ்!
எங்கே சறுக்கியது? விஷுவல்ஸில் காட்டிய மெனக்கெடலை, இயக்குநர் திரைக்கதையில் காட்டத் தவறிவிட்டார். “திரும்பத் திரும்ப அதே கதையா?” என்று ரசிகர்கள் சலித்துக்கொள்ளும் அளவுக்குப் படம் இருக்கிறது. குடும்பத்தைக் கடத்துவது, அவர்களைக் காப்பாற்ற ஹீரோ செல்வது, கடைசியில் ஒரு பெரிய சண்டை – இதே டெம்ப்ளேட்டை எதற்குக் காலம் காலமாகப் பயன்படுத்த வேண்டும்?
படத்தின் மற்றொரு மைனஸ், ‘ஸ்பைடர்’ (Spider) கதாபாத்திரம். மனிதச் சிறுவனான இவனைச் சுற்றியே கதை நகர்கிறது. ஆனால், அந்தக் கதாபாத்திரத்தால் படத்தைத் தாங்க முடியவில்லை. முக்கியமாக, நமக்கு மிகவும் பிடித்த ‘கிரி’ (Kiri) போன்ற கதாபாத்திரங்களைப் ஓரம் கட்டிவிட்டு, ஸ்பைடருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமே.
நடிப்பு மற்றும் பாத்திரப்படைப்பு புதிதாக அறிமுகமாகியுள்ள ‘நெருப்பு இனத் தலைவி’ வராங்-ஆக நடித்திருக்கும் ஊனா சாப்ளின் (Oona Chaplin) மிரட்டியிருக்கிறார். திரையில் அவர் வரும் போதெல்லாம் ஒரு வேகம் இருக்கிறது. வில்லன் குாரிட்ச் உடனான அவரது காட்சிகள் சுவாரஸ்யமாக அமைந்துள்ளன. ஆனால், படத்தின் பிற்பகுதியில் அவரது கதாபாத்திரமும் வலுவிழந்து போகிறது. நாயகி நெய்திரி, படம் முழுக்க அழுதுகொண்டும் கோபப்பட்டுக்கொண்டும் மட்டுமே இருப்பது பலவீனம்.
இறுதித் தீர்ப்பு சுமார் 3 மணி நேரம் 17 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம், ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையைச் சோதிக்கிறது. இடைவேளைக்குப் பிறகு காட்சிகள் நகராமல் தேங்கி நிற்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. வசனங்களும் பல இடங்களில் செயற்கையாக, இன்றைய இளைஞர்கள் பேசும் ‘Gen-Z’ மொழியில் இருப்பது அந்த உலகத்தோடு ஒன்றவிடாமல் தடுக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ கண்களுக்கு ஒரு பிரம்மாண்ட விருந்து; ஆனால் மனதிற்கு நிறைவைத் தரவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியை ரசிப்பவர்களுக்கு இது பிடிக்கும், ஆனால் அழுத்தமான கதையை எதிர்பார்ப்பவர்களுக்கு இது வெறும் சாம்பல் தான்!
CINEMA SPICE RATING: ★★½ (2.5/5)

