“வாத்தியார் வந்துட்டாரு”: தடைகளைத் தகர்த்து பொங்கலுக்கு வெளியாகும் கார்த்தியின் ‘வா வாத்தியார்’
கடந்த சில நாட்களாகக் கோலிவுட்டில் நிலவி வந்த பதற்றம் தற்போது கொண்டாட்டமாக மாறியுள்ளது. கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம், அனைத்துச் சட்டச் சிக்கல்களையும் கடந்து, திட்டமிட்டபடி ஜனவரி 14, 2026 அன்று வெளியாகும் என ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, “ALL DECKS CLEARED” (அனைத்து தடைகளும் நீங்கின) என்ற வாசகம் தாங்கிய புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. போலீஸ் உடையில் கார்த்தி இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஸ்டூடியோ கிரீனின் உருக்கமான கடிதம்
தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல்ராஜா, சினிமா ரசிகர்களுக்காக ஒரு திறந்த மடலை வெளியிட்டுள்ளார். அதில், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் டிசம்பரில் வெளியாக வேண்டிய படம் தள்ளிப்போனதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
“சினிமா என்பது திரையில் தெரியும் கதை மட்டுமல்ல, அது நம் அனைவரின் இதயத்துடிப்பு,” என்று குறிப்பிட்டுள்ள அவர், பொங்கல் திருநாளில் குடும்பங்கள் ஒன்றுகூடும் வேளையில் இப்படம் வெளியாவது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அறிக்கையின் இறுதியில் “வாத்தியார் வந்துட்டாரு!” எனக் குறிப்பிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
ரூ.21.78 கோடி சிக்கல் தீர்ந்தது
அறிக்கையில் “தவிர்க்க முடியாத சூழல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், படத்தின் வெளியீட்டிற்குப் பின்னால் ஒரு பெரிய சட்டப் போராட்டம் நடந்து முடிந்துள்ளது. 2011-ம் ஆண்டு நிலுுவையிலிருந்த ஒரு கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் படத்திற்குத் தடை விதித்திருந்தது.
நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, சுமார் ரூ.21.78 கோடி (அசல் மற்றும் 15 ஆண்டுகால வட்டி) தொகையை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் முழுமையாகச் செலுத்தி சமரசம் செய்துள்ளது. இந்தத் தீர்வு எட்டப்பட்ட பிறகே நீதிமன்றத் தடை நீக்கப்பட்டு, படம் திரைக்கு வருவது உறுதியானது.
புக்கிங் வேட்டை ஆரம்பம்!
சட்டரீதியான க்ரீன் சிக்னல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஜனவரி 12 மாலை முதல் திரையரங்க முன்பதிவுகள் (Bookings) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின. ஏற்கனவே பொங்கல் ரேஸில் பல பெரிய படங்கள் இருந்தாலும், கடைசி நேரத்தில் களமிறங்கும் ‘வா வாத்தியார்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
எம்.ஜி.ஆர் பாணியில் கார்த்தி செய்யும் சேட்டைகள், கிருத்தி ஷெட்டி, சத்யராஜ் ஆகியோரின் நடிப்பு, மற்றும் சந்தோஷ் நாராயணனின் இசை ஆகியவை படத்திற்குப் பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடைகள் அனைத்தும் நீங்கிவிட்ட நிலையில், இனி ஆட்டம் திரையில் தான்!

