Site icon Cinema Spice Entertainment

“மன்னிப்பு சான்றிதழ்” கேட்டவர்களுக்கு பதில்: 50 கோடியை நெருங்கும் பரசக்தி!

Parasakthi movie controversy Sudha Kongara

2026 பொங்கல் பண்டிகை முடிந்துவிட்டது, ஆனால் இணையத்தில் பரசக்தி படத்திற்கு எதிரான “போர்” இன்னும் ஓயவில்லை. தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பரசக்தி திரைப்படம், வெளியாகி 10 நாட்களைக் கடந்துள்ள நிலையில், பல சர்ச்சைகளைத் தாண்டி வசூலில் நிதானமான முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது.

விஜய்யின் ‘ஜனநாயகன்’ (இயக்குநர் ஹெச். வினோத்) படத்துடன் மோதவிருந்த இப்படம், தனித்து வெளியானாலும், இணையத்தில் ஒரு திட்டமிட்ட தாக்குதலைச் சந்தித்துள்ளது. இருப்பினும், உலகம் முழுவதும் இப்படம் 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“அப்போலோஜி சர்டிபிகேட்” (Apology Certificate) சர்ச்சை

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இயக்குநர் சுதா கொங்கரா இணையத்தில் நடக்கும் “ரவுடிசம்” குறித்துக் கடுமையாகச் சாடினார். குறிப்பாக, ‘BlastingTamilCinema’ என்ற எக்ஸ் (X) தள ஐடி-யிலிருந்து வந்த மிரட்டலை அவர் சுட்டிக்காட்டினார்.

“CBFC கிட்ட சர்டிபிகேட் வாங்குறது பெருசு இல்ல.. அண்ணா ஃபேன்ஸ் கிட்ட சாரி கேட்டு, ‘மன்னிப்பு சர்டிபிகேட்’ வாங்கு… அப்போ தான் படம் ஓடும்,” என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது சாதாரண ரசிகர் சண்டை அல்ல, ஒரு படைப்பாளியை மனரீதியாகத் தாக்கும் செயல் என்று சுதா வேதனை தெரிவித்துள்ளார். “முகம் தெரியாத ஐடி-களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு இதைச் செய்கிறார்கள். இது எங்கிருந்து வருகிறது என்று ஊருக்கே தெரியும்,” என்று அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் நெருக்கடி: வரலாற்றைத் திரித்துவிட்டார்களா?

ரசிகர்களின் தாக்குதல் ஒருபுறம் இருக்க, படத்திற்கு அரசியல் ரீதியாகவும் நெருக்கடி எழுந்துள்ளது. 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், வரலாற்றைத் திரித்துக் கூறியிருப்பதாக இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அப்போதைய மத்திய அரசின் செயல்பாடுகளைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி, படத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

ஆனால், இதற்கெல்லாம் சுதா கொங்கரா அஞ்சவில்லை. “இந்தக் கதைக்கு பரசக்தி என்ற தலைப்புதான் சரியானது என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத்தினரே சம்மதித்துள்ளனர். இதில் மாணவர்களின் புரட்சிதான் பிரதானம்,” என்று அவர் கூறியுள்ளார்.

வசூல் நிலவரம்: சறுக்கலா? சாதனையா?

எதிர்மறை விமர்சனங்கள் மற்றும் #BoycottParasakthi போன்ற ஹேஷ்டேக்குகளைத் தாண்டியும், படம் பாக்ஸ் ஆபீஸில் தாக்குப்பிடித்து வருகிறது.

ரயில்வே ஊழியரான சேழியன் (எ) சே என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். தன் தம்பி (அதர்வா) மற்றும் மக்களின் உரிமைக்காக, ஒரு கொடூரமான போலீஸ் அதிகாரியை (ரவி மோகன்) எதிர்த்துப் போராடும் கதைக்களம், ‘பி’ மற்றும் ‘சி’ சென்டர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Exit mobile version