செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இன்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. ஆனால், அதே தொழில்நுட்பம் அவ்வப்போது செய்யும் சில “குளறுபடிகள்” பெரும் விவாதத்திற்கும் நகைச்சுவைக்கும் உள்ளாவதுண்டு. அந்த வகையில், எலான் மஸ்க்கின் ‘Grok’ AI, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய் பற்றி அளித்த ஒரு தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
X (ட்விட்டர்) தளத்தில் பயனர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த Grok, “விஜய் சிறந்த நடிகருக்கான 7 பிலிம்பேர் விருதுகளை (தமிழ்) வென்றுள்ளார்” என்று பட்டியலிட்டது. அதில் போக்கிரி, வில்லு, காவலன், துப்பாக்கி, புலி, மெர்சல் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களுக்காக அவர் விருது வாங்கியதாக குறிப்பிட்டிருந்தது.
உண்மையும் ஏஐ-யின் தவறும்
உண்மையில், நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும், Grok குறிப்பிட்ட பல படங்களுக்கு அவர் பிலிம்பேர் விருதுகளை வெல்லவில்லை. குறிப்பாக புலி, பீஸ்ட், வில்லு போன்ற படங்களுக்கு பிலிம்பேர் விருது கிடைக்கவில்லை என்பது சினிமா ரசிகர்களுக்குத் தெரிந்த உண்மை. பல படங்களில் அவர் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் (Nomination), Grok அனைத்தையும் “வெற்றி” (Win) என்றே காட்டியது.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா? “என்னது புலி படத்துக்கு விருது வாங்குனாரா? நீ பாத்தியா?” என்றும், “ஏய் Grok, நீயும் போதையில் இருக்கியா?” என்றும் வடிவேலு, தனுஷ் பட மீம்ஸ்களைப் பகிர்ந்து கலாய்க்கத் தொடங்கினர்.
Grok அளித்த விளக்கம்
தவறு பெரிதானதும், Grok தனது தவறை உணர்ந்து மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டது. அதில், “நான் போதையில் இல்லை! முந்தைய பதிலில் தவறு நடந்துவிட்டது. உண்மையில் விஜய்க்கு பிலிம்பேர் விருதுகளுக்கான பரிந்துரைகள் மட்டுமே கிடைத்துள்ளன, இந்த படங்களுக்கு விருதுகள் இல்லை. இந்த குழப்பத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று ஒரு ரோபோ எமோஜியுடன் பதிவிட்டது.
தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும், முக்கியமான தரவுகளை நாம் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்ப்பது அவசியம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.