தமிழ் திரையுலகில் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு கூட்டணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன், தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனத்தின் சார்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு சேயோன் என்று பெயரிட்டுள்ளார்.
கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் “என்றும் அன்புடன் #சேயோன்” என்று குறிப்பிட்டு இந்த போஸ்டரை பகிர்ந்துள்ளார். இந்தப் போஸ்டரில் சிவகார்த்திகேயன் இதுவரை பார்த்திராத ஒரு மாறுபட்ட தோற்றத்தில் இருக்கிறார். நீண்ட முடி, மிரட்டலான கண்கள், கையில் ஒரு பெரிய அரிவாள் மற்றும் பின்னணியில் மயில்கள் என இந்த போஸ்டர் முற்றிலும் முருகப் பெருமானின் ஒரு வீர வடிவத்தை நினைவுபடுத்துகிறது.
பரிசோதனை முயற்சியில் சிவகார்த்திகேயன்
இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கும் இந்தப் படம் ஒரு வரலாற்று அல்லது புராணப் பின்னணி கொண்ட கதையாக இருக்கும் எனத் தெரிகிறது. மாவீரன், அயலான், அமரன் எனத் தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுக்கும் சிவகார்த்திகேயன், இந்தப் படத்தின் மூலம் அடுத்த கட்டத்திற்குச் செல்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தொழில்நுட்பக் குழு
இப்படத்திற்கு இசைத் துறையின் முன்னணி நட்சத்திரமான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை விவேக் விஜயகுமார் கவனிக்க, படத்தொகுப்பை சான் லோகேஷ் மேற்கொள்கிறார்.
“வேல் உண்டு பயமில்லை, வீரம் உண்டு வெற்றியும் உண்டு” என ரசிகர்கள் இந்த போஸ்டரை கொண்டாடி வருகின்றனர்.
கமல்ஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் இணைந்திருப்பது, இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

