தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான செய்தி! தளபதி விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான மைல்கல்லாக அமைந்த ‘கில்லி’ திரைப்படம், வரும் பிப்ரவரி 20, 2026 அன்று மீண்டும் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைத் பிரபல விநியோக நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த மறுவெளியீடு குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், “கச்சேரி அப்புறம் ஆடலாம்… இப்போ கபடி ஆடலாமா!” என படத்தின் புகழ்பெற்ற வசனத்தைக் குறிப்பிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, திரையரங்கு உரிமையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் கூட்டத்தை ஈர்ப்பதில் இன்றும் ‘கில்லி’ ஒரு கில்லாடியாகவே திகழ்கிறது.
இயக்குநர் தரணி இயக்கத்தில் 2004-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், விஜய்யை ஒரு மாபெரும் ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது. கபடி வீரர் ‘வேலு’வாக விஜய்யும், ‘தனலட்சுமி’யாக திரிஷாவும் நடித்திருந்த விதம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. அதிலும் குறிப்பாக, வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜின் ‘செல்லம்’ என்ற வசனம் இன்றும் மீம்ஸ்களில் வைரலாகி வருகிறது.
வித்யாசாகரின் இசையில் உருவான “அப்படி போடு”, “அர்ஜுனர் வில்லு” போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட். தியேட்டரில் இந்தப் பாடல்கள் ஒலிக்கும்போது ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரம் இப்போதே கண்ணுக்குத் தெரிகிறது. பழைய நினைவுகளைப் புதுப்பிக்கவும், தற்போதைய இளம் தலைமுறை ரசிகர்கள் ‘கில்லி’யை திரையில் கொண்டாடவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
சமீபகாலமாகப் பழைய ஹிட் படங்கள் மீண்டும் வெளியாவது அதிகரித்து வரும் நிலையில், ‘கில்லி’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 20-க்காக விஜய் ரசிகர்கள் இப்போதே சமூக வலைதளங்களில் கொண்டாட்டங்களைத் தொடங்கிவிட்டனர்.