இந்தியத் திரையுலகில் புராணக்கதைகளை சூப்பர் ஹீரோ பாணியில் சொல்லும் முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், 2024-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ஹனுமான்’ திரைப்படத்தின் அடுத்த பாகமான ‘ஜெய் ஹனுமான்’ (Jai Hanuman) படத்தின் பணிகள் தற்போது முறைப்படி தொடங்கியுள்ளன. இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா, ஹனுமான் பிறந்த இடமாகக் கருதப்படும் ஹம்பிக்கு அருகிலுள்ள புனிதமான அஞ்சனாத்ரி மலையில் (Anjanadri Betta) வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இப்படத்தை இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் இணைந்து தயாரிக்கின்றன. தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், அனில் தடானி, நவீன் யெர்னேனி மற்றும் ரவி சங்கர் ஆகியோர் முன்னிலையில் இந்தப் பூஜை நடைபெற்றது.
படத்தின் முதல் காட்சிக்கான கிளாப் போர்டை பூஷன் குமார் அடிக்க, அனில் தடானி கேமராவை ஆன் செய்தார். ஒரு சிறப்பம்சமாக, முதல் பாகத்தின் நாயகன் தேஜா சஜ்ஜா முதல் காட்சியை இயக்கினார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘காந்தாரா’ படம் மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ரிஷப் ஷெட்டி, இப்படத்தில் ஹனுமானாக நடிக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், “ஜெய் ஹனுமான் ஒரு தெய்வீகத் திரைப்படம், திரையில் எங்கள் பக்தியை வெளிப்படுத்தக் கிடைத்த ஒரு வாய்ப்பு” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். நவீன தொழில்நுட்பமான VFX மற்றும் கலாச்சார வேர்களை இணைத்து இந்தத் திரைப்படம் உருவாகவுள்ளது.
விரைவில் இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பிரசாந்த் வர்மாவின் இந்த ‘சினிமாடிக் யுனிவர்ஸ்’ இந்திய சினிமாவில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

