சினிமா எனும் கோட்டை தகர்க்கப்படுகிறது
இயக்குநர் ராம் கோபால் வர்மா (RGV) எப்போதும் சர்ச்சைகளுக்கும் புதுமைகளுக்கும் பெயர் போனவர். தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு திரைத்துறையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. Seedance 2.0 என்ற AI தொழில்நுட்பத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள அவர், இது ஒட்டுமொத்த சினிமாத்துறையையும் “கொலை செய்யப்போகிறது” என்று கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், இத்தனை காலமும் சினிமா என்பது ஒரு சிலரின் கைகளில் மட்டுமே இருந்த ஒரு பூட்டப்பட்ட கோட்டை. எஸ்.எஸ்.ராஜமௌலி போன்ற பிரம்மாண்ட இயக்குநர்களுக்கு 1000 கோடி ரூபாய் நிதி கிடைக்கிறது. ஆனால், கோயம்புத்தூரிலோ அல்லது ஒரு சிறிய கிராமத்திலோ இருக்கும் ஒரு திறமையான இளைஞனுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.
“அந்த வாய்ப்புக்கான கதவு பூட்டப்பட்டிருந்தது. ஆனால் இப்போது Seedance 2.0 அந்த கதவை உடைத்து தீயிட்டு கொளுத்திவிட்டது.”
கூட்டமும் இல்லை… செலவும் இல்லை!
ஒரு காட்சியைப் படமாக்க நடிகர்கள், கேமராமேன், எடிட்டர் என நூற்றுக்கணக்கான நபர்கள் தேவைப்படும் தற்போதைய சூழல் மாறப்போகிறது. இனி ஒரு “Prompt” (வசனம் அல்லது கட்டளை) போதும். கற்பனைத் திறன் கொண்ட எவரும், மும்பைக்கோ சென்னைக்கோ வராமலேயே, தங்கள் வீட்டிலிருந்தே பிரம்மாண்டமான காட்சிகளை உருவாக்க முடியும்.
RGV-யின் பார்வையில், சினிமா என்பது இனி ஒரு சில ‘எலைட்’ மனிதர்களின் சொத்து அல்ல. இது ஒரு “உண்மையான ஜனநாயகம்.”
“டைனோசர்கள் 100 ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டன. இப்போது விண்கல் (AI) வந்துவிட்டது. இது சினிமாவை கொடூரமாகக் கொலை செய்யும், ஆனால் அதுவே சினிமாவின் விடுதலையாகவும் அமையும்,” என அவர் மிகத் தீவிரமாகத் தெரிவித்துள்ளார்.
திறமைக்கே முதலிடம்
அவர் தனது ஆரம்பகால அனுபவத்தைச் சுட்டிக்காட்டி, நடிகர் நாகார்ஜுனா ‘சிவா’ படத்திற்காகத் தன்னைத் தேர்ந்தெடுத்தபோது அவரிடம் சில ஆப்ஷன்கள் மட்டுமே இருந்தன என்றார். ஆனால் இன்று, AI-யின் உதவியால் ஒரு நடிகருக்கு ஆயிரக்கணக்கான திறமையாளர்கள் கிடைப்பார்கள். அதில் 990 பேர் தன்னை விடச் சிறந்தவர்களாக இருக்கக்கூடும் என்றும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
சுருக்கமாகச் சொன்னால், “பணம் மற்றும் செல்வாக்கு” இருந்தால்தான் படம் எடுக்க முடியும் என்ற நிலை மாறி, “திறமை இருந்தால் மட்டுமே” படம் எடுக்கலாம் என்ற புதிய யுகம் பிறந்துவிட்டதாக RGV கருதுகிறார்.
இனி பின்வாங்குவதற்கே இடமில்லை; சினிமா புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது!

