சூர்யா ரசிகர்களுக்கு இன்று ஒரு மறக்க முடியாத நாள். நீண்ட நாட்களாக எந்த ஒரு பெரிய அப்டேட்டும் இல்லாமல் இருந்த ரசிகர்களுக்கு, ஒரே நாளில் இரண்டு மாஸ் செய்திகள் கிடைத்துள்ளன. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலும், வெங்கட் அட்லூரி இயக்கத்தில் உருவாகும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பும் வெளியாகி இணையத்தை அதிர வைத்துள்ளது.
மே 15: திரையரங்குகளில் ‘கருப்பு’ தாண்டவம்!
தேர்தல் மற்றும் ஓடிடி விவகாரங்களால் தள்ளிப்போய்க்கொண்டிருந்த ‘கருப்பு’ திரைப்படம், தற்போது மே 15, 2026 அன்று வெளியாக உள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராகவும், அதே சமயம் ஒரு கிராமத்து அதிரடி நாயகனாகவும் இரட்டை வேடங்களில் மிரட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. சாய் அபயங்கரின் இசையும், ஜி.கே. விஷ்ணுவின் ஒளிப்பதிவும் இந்தப் படத்திற்குப் மிகப்பெரிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு திரிஷாவுடன் சூர்யா இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மாலை 4:06 – ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ அதிரடி!
இன்னொரு பக்கம், சூர்யாவின் 46-வது படமான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் டீசர் இன்று மாலை 4:06 மணிக்கு வெளியாகிறது. இது ஒரு கியூட் லவ் ஸ்டோரி மற்றும் குடும்பப் பாங்கான படமாக இருக்கும் எனத் தெரிகிறது. மலையாள நடிகை மமிதா பைஜூ இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘வாத்தி’ பட புகழ் வெங்கட் அட்லூரி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
ஏன் இந்த தாமதம்?
‘கருப்பு’ படம் ஏன் இவ்வளவு தாமதமானது என்று கேட்டதற்கு, ஆர்.ஜே. பாலாஜி சமீபத்தில் விளக்கம் அளித்திருந்தார். படத்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என்பதற்காகவும், சரியான நேரத்தில் படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகவும் காத்திருந்ததாக அவர் தெரிவித்தார். “உங்கள் காத்திருப்புக்கு ஒரு நல்ல பலன் இருக்கும்” என்று அவர் ரசிகர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
மொத்தத்தில், இந்த கோடை காலம் சூர்யா ரசிகர்களுக்கு “சூர்யா கொண்டாட்டம்” தான்!

