மேடையிலேயே நின்ற திருமணம் போன்ற ஏமாற்றம்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். நடிகர் அஜித் குமாரின் 62-வது படத்தை (#AK62) இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஆனால், எதிர்பாராத விதமாக அந்த வாய்ப்பு கைநழுவிப் போனது. இது குறித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு விக்னேஷ் சிவன் தற்போது மௌனம் கலைத்துள்ளார்.
தனது புதிய படமான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) நிகழ்ச்சியில் பேசிய அவர்,
“ஒரு பெரிய படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும் அது நடக்காமல் போனது. அது கல்யாண மேடையில் மணப்பெண் பாதியில் எழுந்து சென்றது போன்ற ஒரு வலியை கொடுத்தது,” என்று மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அவருக்கு சிறிய படங்களே வந்ததாகவும், பெரிய படங்களை இயக்கும் தகுதி அவருக்கு இல்லை என்று திரையுலகினர் நினைத்ததாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.
நயன்தாரா செய்த உதவி
தனது தற்போதைய படமான LIK படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் குறித்தும் அவர் பேசினார். ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு நின்றபோது, அவரது மனைவி நயன்தாரா தனது மூக்குத்தி அம்மன் படத்திற்காக வாங்கிய முன்பணத்தை கொடுத்து உதவி செய்ததாகக் கூறி நெகிழ்ந்தார்.
ரசிகர்களின் கோபமும் விமர்சனமும்
விக்னேஷ் சிவனின் இந்த உருக்கமான பேச்சிற்கு இடையே, அஜித் ரசிகர்கள் அவர் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். விக்னேஷ் சிவன் கதையை முழுமையாக முடிக்காமல், நேர்காணல்களிலும் யூடியூப் விவாதங்களிலும் நேரத்தை செலவழித்ததே அவர் அந்தப் படத்தில் இருந்து நீக்கப்படக் காரணம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
“நேரத்தை வீணடித்தது நீங்கள்தான், கதையில் கவனம் செலுத்தாமல் விளம்பரத்தில் ஆர்வம் காட்டியதால் தான் அந்தப் பெரிய வாய்ப்பு பறிபோனது” என ரசிகர்கள் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் மூலம் தனது திறமையை மீண்டும் நிரூபிக்க காத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

