காதலும் கண்ணீரும்: நயன்தாராவின் திடீர் வருகை
தமிழ் சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா பொதுவாக திரைப்பட ப்ரோமோஷன்களில் கலந்துகொள்வதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தனது கணவர் விக்னேஷ் சிவனின் கனவுத் திட்டமான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) படத்திற்காக அந்த விதியை உடைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யாரும் எதிர்பாராத விதமாக நயன்தாரா மேடை ஏறியது அங்கிருந்தவர்களையும், விக்னேஷ் சிவனையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேடையில் பேசிக்கொண்டிருந்த விக்னேஷ் சிவன், நயன்தாராவை பார்த்ததும் ஒரு நிமிடம் பேச்சற்று நின்றார். பின்னர் உணர்ச்சிவசப்பட்டு மேடையிலேயே அவரைக் கட்டிப்பிடித்து அழுதார். “நடிகை நயன்தாராவை என்னால் கூட ஒரு ஆடியோ லான்ச்சிற்கு அழைத்து வர முடியாது. ஆனால் இன்று அவர் ஒரு மனைவியாக இங்கே வந்துள்ளார்,” என்று விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
படத்தை மீட்டெடுத்த ‘மூக்குத்தி அம்மன்’ அட்வான்ஸ்!
இந்த விழாவில் மற்றொரு ரகசியத்தையும் விக்னேஷ் சிவன் உடைத்தார். படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தபோது கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஓடிடி மார்க்கெட் சரிந்ததால் பட்ஜெட்டில் சிக்கல் உருவானது. அப்போது நயன்தாரா செய்த உதவிதான் படத்தை காப்பாற்றியுள்ளது. “மலேசியா ஷூட்டிங்கிற்கு பணம் இல்லாதபோது, நயன்தாரா தனது ‘மூக்குத்தி அம்மன்’ படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ் பணத்தை கொடுத்து உதவினார்,” என்று விக்னேஷ் சிவன் கூறினார்.
நயன்தாராவின் கணவர் என்பதில் பெருமை!
சமூக வலைதளங்களில் வரும் எதிர்மறை கருத்துக்களைப் பற்றி கவலைப்படாமல், “நயன்தாராவின் கணவர் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு என்றும் பெருமைதான்” என்று விக்னேஷ் சிவன் மார்தட்டினார். பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வு, வெறும் சினிமா விழாவாக மட்டுமில்லாமல், ஒரு தம்பதியின் வெற்றிகரமான காதலின் சாட்சியாகவும் அமைந்தது. ஒரு தூணாக இருந்து தனது கணவரின் கனவை நயன்தாரா தாங்கிப் பிடிப்பதை கண்டு ரசிகர்கள் நெகிழ்ந்து போயுள்ளனர்.