Site icon Cinema Spice Entertainment

திரையரங்குகளில் பட்டையைக் கிளப்பும் ‘மொத ராத்திரி’: சிம்பு, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டு மழை!

Modha Rathri Box Office Success

சமீபகாலமாகப் பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படங்களுக்கு மத்தியில், எளிய கதையமைப்பும் அழுத்தமான திரைக்கதையும் கொண்ட சிறு பட்ஜெட் படங்கள் ரசிகர்களின் மனதை வென்று சாதனை படைத்து வருகின்றன. அந்த வரிசையில், அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘மொத ராத்திரி’. பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கியுள்ள இந்தத் திரைப்படம், தற்போது 3-வது வாரத்தைக் கடந்து பாக்ஸ் ஆபிஸில் இமாலய சாதனையை நோக்கி நடைபோடுகிறது.

ஒரு கிராமத்துத் திருமண விழாவை மையமாக வைத்து, ஒரே இரவில் நிகழும் சுவாரசியமான, யதார்த்தமான தருணங்களை அக்மார்க் நகைச்சுவையுடன் விவரிப்பதே இப்படத்தின் மையக்கரு. கிராமத்து மனிதர்களின் சுபாவங்கள், உறவுகளுக்கு இடையே எழும் சின்னஞ்சிறு ஊடல்கள், எதார்த்தமான உரையாடல்கள் எனத் திரைக்கதையை மிக நேர்த்தியாகக் கையாண்ட விதம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. நாயகனாக ரிஷிகாந்த், நாயகியாக அனிஷ்மா அனில்குமார் மற்றும் சக நடிகர்களின் யதார்த்த நடிப்பு படத்திற்குப் பெரும் பலமாக அமைந்தது.

இப்படத்தைப் பார்த்து வியந்த முன்னணி நடிகர் சிலம்பரசன் டிஆர் (STR), தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் மனதாரப் பாராட்டியுள்ளார். பிற மொழிகளில் வரும் எளிய திரைப்படங்களை நாம் அதிகம் கொண்டாடும் அதே வேளையில், தமிழில் புதிய குழுவினர் முன்னெடுக்கும் இது போன்ற ஆரோக்கியமான முயற்சிகளுக்கும் அதே ஆதரவை அளிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரே இரவில் விரியும் திருமணக் கதையையும், கதாபாத்திரங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட விதத்தையும் சிலாகித்துள்ள சிம்பு, தரமான படைப்புகள் மக்களைச் சென்றடையத் தயாரிப்பாளர்கள் கூடுதல் விளம்பர ஆதரவு தர வேண்டும் என்றும் ரசிகர்களைத் திரையரங்கிற்குச் சென்று படம் பார்க்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இதேபோல், முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்திற்குக் கிடைத்துவரும் பேராதரவைக் கண்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நடிகர் ரிஷிகாந்த், தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையான கலகலப்புடன் அமைந்திருந்ததாகவும், எழுத்து வடிவத்தைத் திரையில் காட்சிப்படுத்திய விதம் அற்புதம் என்றும் அவர் கூறியுள்ளார். ராஜா கருப்பசாமி தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ள நம்பிக்கைக்குரிய படைப்பாளி என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ள ‘மொத ராத்திரி’, திரையரங்குகளில் மக்களின் முதல் தேர்வாக வலம் வந்து பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டர் அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

Exit mobile version