சினிமா ரசிகர்களை எப்போதும் தனது கணிக்க முடியாத திருப்பங்களால் இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் எம். நைட் ஷியாமலன், தற்போது முற்றிலும் புதியதொரு ஜானரில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்த தயாராகிவிட்டார். உலகப் புகழ்பெற்ற காதல் நாவலாசிரியர் நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ் உடன் அவர் முதல்முறையாக கைகோர்த்துள்ள புதிய அமானுஷ்ய திரில்லர் படமான ரிமைன் (Remain) படத்தின் முதல் டீசர் முன்னோட்டத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் திறமைவாய்ந்த முன்னணி நடிகர் ஜேக் கிலென்ஹால், டேட் கார்டன் என்ற தனிமை விரும்பியான கட்டிடக் கலைஞராக (Architect) நடித்துள்ளார். வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் சோகத்தால் மனமுடைந்த அவர், அமைதியைத் தேடி ஒரு அழகிய கடலோர நகரத்திற்கு தனது புதிய பணிக்காக குடியேறுகிறார். ஆனால், அந்த அமைதி வெகுநாட்கள் நீடிக்கவில்லை. அங்கு வசிக்கும் ரென் (Wren) என்ற வசீகரமான இளம் பெண்ணை அவர் சந்திக்கும்போது, அவரது உலகம் முற்றிலுமாக தலைகீழாக மாறுகிறது. ரென் கதாபாத்திரத்தில் நடிகை ஃபோப் டைனிவர் நடித்துள்ளார்.
டீசரில், “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இதுவரை நான் சந்தித்த எந்தப் பெண்ணையும் போல நீ இல்லை” என்று டேட் பேசும் மென்மையான உரையாடலுடன் தொடங்கும் காட்சிகள், அடுத்த நொடிகளிலேயே மிரட்டும் பின்னணி இசையோடும் மர்மங்களோடும் மாறுகின்றன. ரென் ஒரு சாதாரண பெண்ணா அல்லது அந்த கடலோர நகரத்தை ஆட்டிப்படைக்கும் கொடிய மர்மத்தின் பின்னணியில் உள்ள அமானுஷ்ய சக்தியா என்ற கேள்வியை முன்வைத்து திகிலூட்டுகிறது டீசர்.
இவர்களுடன் ஆஷ்லே வால்டர்ஸ், ஜூலி ஹேகர்ட்டி, மற்றும் ஜே ஓ. சாண்டர்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதையை ஷியாமலன் மற்றும் நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ் இணைந்து உருவாக்க, திரைக்கதையை ஷியாமலனே நேரடியாக எழுதியுள்ளார். ஷியாமலனுடன் இணைந்து அஸ்வின் ராஜன், மார்க் பியன்ஸ்டாக் மற்றும் தெரசா பார்க் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர்.
திரைப்பட ரசிகர்களுக்கு கூடுதல் விருந்தாக, ஷியாமலனின் முந்தைய வெற்றிப் படங்களான தி சிக்ஸ்த் சென்ஸ் மற்றும் சைன்ஸ் போன்ற படங்களுக்கு இசையமைத்த ஜாம்பவான் ஜேம்ஸ் நியூட்டன் ஹோவர்ட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவருடன் கைகோர்த்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அட்டகாசமான கடலோரக் காட்சிகளை ஒளிப்பதிவாளர் அடோல்போ வெலோசோ படம்பிடித்துள்ளார்.
ஆரம்பக்கட்ட சிறப்பு திரையிடல்களில் படத்திற்கு மிகப்பெரிய அளவிலான பாராட்டுக்கள் கிடைத்துள்ளதாக ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வார்னர் பிரதர்ஸ் வெளியீடாக உருவாகியுள்ள ரிமைன் திரைப்படம், சர்வதேச திரையரங்குகளில் 2027 பிப்ரவரி 3 அன்றும், வட அமெரிக்காவில் 2027 பிப்ரவரி 5 அன்றும் திரைக்கு வரவுள்ளது.

