நவம்பர் 28, 2025 அன்று, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அஜித் குமாரின் 2004 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘அட்டகாசம்’ திரைப்படம், இப்போது 4K டால்பி அட்மாஸ் தரத்தில் மீண்டும் திரையரங்குகளில் வர உள்ளது. இந்த மாஸ் திரைப்படம் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வெளியாகிறது. இயக்குநர் சரண் இயக்கிய இந்தப் படம், முதலில் நவம்பர் 12, 2004 அன்று வெளியானது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ டிரெய்லரில், படத்தின் அதிரடி சண்டைக் காட்சிகளும், அஜித்தின் ‘மாஸ் எண்ட்ரி’ காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. விநியோகஸ்தர் பிரியா நாயரின் IFPA MAX PRODUCTIONS நிறுவனம் இதை வெளியிடுகிறது. ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் குறித்த உற்சாகம் மிக அதிகமாக உள்ளது. IFPA ASSOCIATION, “இந்த முறை, புக்கிங்ஸ் தூத்துக்குடியில் இருந்து ஆரம்பிக்கிறது… ரெடியா?” என்று பதிவிட்டுள்ளது, இது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.
சர்ச்சையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பும்
‘அட்டகாசம்’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் அறிவிப்புக்கு முன்பு ஒரு சிறிய குழப்பம் நிலவியது. சில வாரங்களுக்கு முன், அதிகாரப்பூர்வமற்ற ஒரு டிரெய்லர் வெளியானது. அப்போது படத்தின் இயக்குநர் சரண், அந்த டிரெய்லருக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுத்திருந்தார். இதனால், படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்படுமோ என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால், இப்போது அனைத்து குழப்பங்களும் நீங்கிவிட்டது. தற்போது, இயக்குநர் சரண் அவர்களே, DOne Channel (சுரேஷ் சந்திராவின் PR நிறுவனம்) உடன் இணைந்து, படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரையும், நவம்பர் 28 வெளியீட்டுத் தேதியையும் உறுதிப்படுத்தி தீவிரமாகப் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
இயக்குநர் சரண், “அஜித் அவர்களை அண்ணாந்து பார்த்து அவருக்கென்றே அளவெடுத்து சட்டையாகக் தைத்த கதை, திரைக்கதை, வசனங்கள், பாடல்களுக்கு அவரின் நடிப்பில்லையென்றால் உயிரோ? இது அவரது ரசிகர்களுக்கு நெருக்கமான படம்!” என்று கூறி, ரீ-ரிலீஸ் குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் ‘அஞ்சான்’ திரைப்படமும் களத்தில்
அஜித்தின் ‘அட்டகாசம்’ ரீ-ரிலீஸ் ஆகும் அதே நாளில், சூர்யாவின் 2014 ஆம் ஆண்டு கேங்ஸ்டர் படமான ‘அஞ்சான்’ திரைப்படமும் மீண்டும் வெளியாகிறது. ‘அஞ்சான்’ திரைப்படம், இம்முறை 1 மணி நேரம் 59 நிமிடங்கள் நீளம் கொண்ட, வெட்டப்பட்ட (trimmed) ஒரு புதிய வடிவத்தில் வெளியாகிறது. இரண்டு மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால், ரசிகர்கள் பெரிய கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர். திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் இரு படங்களுக்கும் முன்பதிவு சூடுபிடித்துள்ளது.