நம்பிக்கையால் செதுக்கப்பட்ட பயணம்
தமிழ் திரையுலகில் “பிரின்ஸ்” என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் சிவக்கார்த்திகேயன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். குறிப்பாக, டார்மெரிக் மீடியா மற்றும் சிவக்கார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவுகள் வைரலாகி வருகின்றன.
எப்போதும் உண்மையான நட்சத்திரம்! டார்மெரிக் மீடியா நிறுவனம் சிவக்கார்த்திகேயனை வாழ்த்தி வெளியிட்ட பதிவில், “எப்போதும் உண்மையாக இருக்கும் ஒரு நட்சத்திரம்” (A Star Who Stayed Real) என்று குறிப்பிட்டுள்ளது. சிவக்கார்த்திகேயனின் மிகப்பெரிய பலமே அவரது எளிமைதான். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, இன்று ஒரு மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்த பின்பும், அவர் தனது ஆரம்பகால எளிமையைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதை இந்தப் பதிவு உணர்த்துகிறது.
‘சேயோன்’ பாடல் மற்றும் நன்றியறிவிப்பு இந்த பிறந்தநாளின் சிறப்பு அம்சமாக #Seyon என்ற பெயரில் ஒரு பிரத்யேகப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள சிவக்கார்த்திகேயன், “அற்புதமான பாடல் மற்றும் அன்பான வாழ்த்துகளுக்கு டார்மெரிக் மீடியா குழுவிற்கு மிக்க நன்றி! ❤️🙏” என்று தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எஸ்கே புரொடக்ஷன்ஸ் நெகிழ்ச்சி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ்கே புரொடக்ஷன்ஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்ட பயணம் இது. நீங்கள் தொடர்ந்து உயர்ந்து நிற்கிறீர்கள் – மற்றவர்களுக்கு உத்வேகம் அளித்து, பணிவுடன் வழிநடத்துகிறீர்கள்” என்று புகழாரம் சூட்டியுள்ளது.
ஒரு சாதாரண இளைஞனாகத் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்றது மட்டுமல்லாமல், பல புதிய திறமையாளர்களுக்குத் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் வாய்ப்பளித்து வரும் சிவக்கார்த்திகேயனின் வளர்ச்சி ஒரு மிகப்பெரிய முன்னுதாரணம்.
#HappyBirthdaySK என்ற ஹேஷ்டேக் தற்போது உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தனது கடின உழைப்பால் ஒவ்வொரு படத்திலும் தன்னைத் தானே மெருகேற்றிக் கொள்ளும் சிவக்கார்த்திகேயன், வரும் ஆண்டுகளில் இன்னும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. பிறந்தநாள் காணும் சிவக்கார்த்திகேயனுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்களுடன், சிவக்கார்த்திகேயன் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள “சேயோன்” படத்தின் அதிரடியான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கிராமிய மணம் மாறாத, அதே சமயம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த புரோமோவில், சிவக்கார்த்திகேயனின் தோற்றம் மற்றும் பின்னணி இசை ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவிலும், சுப்ரீம் சுந்தர் சண்டைப்பயிற்சியிலும் உருவாகியுள்ள இப்படம், சிவக்கார்த்திகேயனின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.