Cinema Spice Entertainment

தாதாசாகேப் பால்கே திரைப்பட விழா 2026: ‘தி வைல்ட் கால்’ படத்திற்கு சிறந்த அனிமேஷன் திரைப்பட விருது!

இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரம்: ‘தி வைல்ட் கால்’ அனிமேஷன் படத்திற்கு தாதாசாகேப் பால்கே விருது!

இந்தியத் திரையுலகில் மிகவும் மதிப்புமிக்க சுதந்திர திரைப்பட விழாக்களில் ஒன்றாகக் கருதப்படுவது தாதாசாகேப் பால்கே திரைப்பட விழா. இதன் 16-வது ஆண்டு விருது வழங்கும் விழா 2026-ல் கோலாகலமாக நடைபெற்றது. இதில், அனிமேஷன் பிரிவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, “சிறந்த அனிமேஷன் திரைப்படம்” என்ற விருதை ‘தி வைல்ட் கால்’ (The Wild Call) தட்டிச் சென்றுள்ளது.

ஆட்லர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், நவீத் எஸ் ஃபரீத் மற்றும் அசாருதீன் சுலைமான் ஆகியோரின் இயக்கத்தில் உருவான இந்தப் படம், இந்திய அனிமேஷன் துறையில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. சுமார் 12 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம், சாதாரணத் திரையில் பார்ப்பது போன்றதல்லாமல், 180° கோணத்தில் பார்வையாளர்களை ஒரு நிஜக் காட்டுக்குள்ளேயே அழைத்துச் செல்லும் அனுபவத்தைத் தருகிறது.

தொழில்நுட்ப நேர்த்தி மற்றும் இசை

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெரும் தொழில்நுட்பக் குழுவின் உழைப்பு உள்ளது. வெங்கி சந்திரசேகர் தலைமையில் லைட்ஸ் ஆன் மீடியா (Lights On Media) நிறுவனம் இந்தப் படத்தின் அனிமேஷன் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மிக நேர்த்தியாகச் செய்து முடித்துள்ளது. மேலும், பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதாவின் பின்னணி இசை, வனவிலங்குகளின் உலகத்தை நம் கண்முன்னே தத்ரூபமாகக் கொண்டு வந்துள்ளது.

கதைக்களம்: ஒரு அற்புதமான இந்தியப் பயணம்

ஒரு சிங்கம் மற்றும் புலிக்குட்டிகள் இணைந்து இந்தியாவின் பல்வேறு நிலப்பரப்புகளில் மேற்கொள்ளும் சாகசப் பயணமே இந்தப் படத்தின் கதை. இந்தியப் பெருங்கடல், பச்சைப் பசேலென இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகள், பனி படர்ந்த இமயமலை மற்றும் பரந்து விரிந்த தார் பாலைவனம் என இந்தியாவின் பல்லுயிர் பெருக்க மையங்களை இந்தப் படம் மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.

வெறும் பொழுதுபோக்குத் திரைப்படமாக மட்டுமில்லாமல், இந்திய யானை மற்றும் பெருங்குருவி உள்ளிட்ட 23 அபூர்வ உயிரினங்களை இந்தப் படம் அறிமுகப்படுத்துகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான இணக்கமான வாழ்வு குறித்த மிக முக்கியமான செய்தியை இந்தப் படம் உரக்கச் சொல்கிறது.

உயரிய வழிகாட்டுதல்

இந்தப் படம் உருவாக முழு முதற் காரணமாக இருந்தவர்கள் பாட்னாவின் ஆர்.சி.சி.எஃப் கோபால் சிங், ஐ.எஃப்.எஸ் மற்றும் ராஜ்கிர் உயிரியல் பூங்கா சஃபாரியின் இயக்குநர் ராம் சுந்தர், ஐ.எஃப்.எஸ் ஆகியோர் ஆவர். இவர்களின் ஆலோசனையோடு, ராஜ்கிர் ஜூ சஃபாரி வழங்கிய இந்தப் படம் தற்போது இந்திய அளவில் பெருமை சேர்த்துள்ளது.

Exit mobile version