திரையரங்கில் அமர்ந்திருக்கும் ரசிகர்களின் உணர்ச்சிகளைத் தன் கேமரா கோணங்களால் மட்டுமே கட்டுப்படுத்தத் தெரிந்த ஒரு சில இயக்குநர்களில் சாம் ரைமி மிக முக்கியமானவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2026-ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஒரு அசல் ஹாரர் த்ரில்லர் படத்தோடு அவர் மீண்டும் களம் இறங்கியுள்ளார். அதுதான் இந்த ‘செண்ட் ஹெல்ப்’. கார்ப்பரேட் உலகத்தின் பாசாங்குகளையும், மனிதனின் மிருகத்தனமான உயிர்வாழும் உள்ளுணர்வையும் இணைத்து ஒரு விறுவிறுப்பான கதையைத் தந்துள்ளார் இயக்குநர். சில குறைகள் இருந்தாலும், த்ரில்லர் ரசிகர்களை திருப்திப்படுத்தும் இந்தத் திரைப்படம்.
தன் திறமையை மதிக்காமல், வாரிசு அரசியல் மற்றும் ஆதிக்க மனப்பான்மையால் தங்களை நடத்தும் மேலதிகாரிகளைப் பார்த்துப் பற்களைக் கடித்தபடி வேலை செய்யும் ஒவ்வொரு ஊழியருக்குமான ஒரு பழிவாங்கும் கற்பனைக் கதையாக இது தொடங்குகிறது. கதையின் நாயகி லிண்டா லிடில் (ராக்ஷல் மெக்ஆடம்ஸ்), கார்ப்பரேட் கணக்குகளில் உலக மகா மேதை. ஆனால், பிறரிடம் பழகத் தெரியாத, சக ஊழியர்களால் கேலிக்குள்ளாக்கப்படும் ஒரு பெண். நிறுவனத்தின் பழைய முதலாளி அவளுக்குக் கொடுத்த பதவி உயர்வை, அவருடைய மறைவுக்குப் பின் பொறுப்பேற்கும் அவருடைய திமிர்பிடித்த மகன் பிராட்லி பிரஸ்டன் (டைலன் ஓ பிரையன்) தட்டிப்பறிக்கிறான். அவளுடைய தோற்றத்தைக் காரணம் காட்டி, அவளை ஒரு முட்டுச்சந்தான பதவிக்கு மாற்றவும் திட்டமிடுகிறான்.
ஒரு முக்கிய பிசினஸ் டீலை முடிப்பதற்காக லிண்டாவைத் தன்னுடன் பாங்காக் நகருக்கு விமானத்தில் அழைத்துச் செல்கிறான் பிராட்லி. ஆனால், நடுவானில் வீசும் பயங்கர புயல் காரணமாக விமானத்தின் எஞ்சின் பழுதாகி, அது கடலில் விழுந்து நொறுங்குகிறது. இந்த விபத்திலிருந்து லிண்டாவும், பலத்த காயமடைந்த பிராட்லியும் மட்டுமே உயிர் தப்பி, தாய்லாந்து வளைகுடாவில் உள்ள ஒரு மனித நடமாட்டமில்லாத தீவில் கரை ஒதுங்குகிறார்கள்.
இங்கிருந்துதான் படத்தின் உண்மையான ஆட்டம் தொடங்குகிறது. நவீன நாகரிக உலகம் கற்றுக்கொடுத்த பதவிகளும், பணக்கார மிதப்புகளும் அந்தத் தீவில் செல்லாக்காசாக மாறுகின்றன. நடக்கக்கூட முடியாத நிலையில் பிராட்லி கிடக்க, டிவியில் ‘சர்வைவர்’ நிகழ்ச்சிகளைப் பார்த்து உயிர்வாழும் கலைகளைக் கற்று வைத்திருக்கும் லிண்டா அந்தத் தீவின் மகாராணியாக மாறுகிறாள். அவளுக்கு உணவு தேடத் தெரிகிறது, வீடு கட்டத் தெரிகிறது. பிராட்லி இன்னும் தன்னை முதலாளி போல நடத்த முயலும்போது, அவனுக்குப் பாடம் புகட்ட லிண்டா எடுக்கும் முடிவுகள் கைதட்டல் பெறுகின்றன.
லிண்டாவாக வரும் ராக்ஷல் மெக்ஆடம்ஸ் மற்றும் பிராட்லியாக வரும் டைலன் ஓ பிரையன் ஆகிய இருவரின் நடிப்புதான் படத்தின் மிகப்பெரிய பலம். ஒரு பயந்தாங்குலி ஊழியராக இருந்து, காட்டின் சட்டங்களுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ளும் பாத்திரத்தில் ராக்ஷல் மிரட்டியுள்ளார். கார்ப்பரேட் திமிரைக் காட்டிவிட்டு, பின்னர் உயிர் பிச்சை கேட்டு கெஞ்சும் பாத்திரத்தில் டைலன் ஓ பிரையன் கச்சிதம். இருவருக்கும் இடையே நடக்கும் அந்த உளவியல் யுத்தத்தை சாம் ரைமி தனது வழக்கமான அமானுஷ்ய கேமரா கோணங்களால் சுவாரசியமாக்கியுள்ளார்.
ஆனால், படத்தின் இரண்டாம் பாதியில் திரைக்கதை சற்று தடம் மாறுகிறது. லிண்டா தன் சுயநலத்திற்காக சில எல்லைகளைத் தாண்டும்போது, அவள் மீதான நம் அனுதாபம் குறையத் தொடங்குகிறது. தன்னை மீட்க வரும் படகுகளை மறைப்பது, பிராட்லியின் காதலியை விபத்தில் சிக்க வைப்பது என அவளுடைய பாத்திரம் எதிர்மறையாக மாறும்போது, படம் ஒரு நல்லவன்-கெட்டவன் சண்டையாக இல்லாமல், இரண்டு சுயநலவாதிகளின் மோதலாக மாறிவிடுகிறது. சாம் ரைமியின் முந்தைய படங்களைப் போல இரத்தக் களரியான காட்சிகள் இதில் தாராளமாக உள்ளன. குறிப்பாகக் கண்களைத் தாக்கும் ஒரு காட்சி த்ரில்லர் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்றாலும், சாதாரண ரசிகர்களுக்கு அது சற்று அருவருப்பைத் தரலாம்.
தொழில்நுட்ப ரீதியாக, டானி எல்ஃப்மனின் பின்னணி இசை படத்திற்கு ஒரு காவியத் தன்மையைத் தருகிறது. சாம் ரைமியின் கேமரா அசைவுகள் விறுவிறுப்பைக் கூட்டுகின்றன. எனினும், படத்தின் விசுவல் எஃபெக்ட்ஸ் (VFX) காட்சிகள் மிகவும் செயற்கையாக இருப்பது பெரும் பலவீனம். விமான விபத்து மற்றும் தீவின் சில பகுதிகள் கிராபிக்ஸ் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் அதன் முடிவு, இன்றைய சமூகத்தின் மீதான ஒரு கசப்பான விமர்சனமாக முடிகிறது. தீவிலிருந்து தப்பித்து வந்து, அதை ஒரு சுயசரிதை புத்தகமாக மாற்றி, பெரும் பணக்காரியாக வலம் வரும் லிண்டா பேசும் வரிகள் தற்போதைய சுயநல உலகத்தைப் பிரதிபலிக்கின்றன. மொத்தத்தில், ‘செண்ட் ஹெல்ப்’ என்பது ஒருமுறை பார்க்கக்கூடிய, விறுவிறுப்பான மற்றும் ரத்தம் தெறிக்கும் ஒரு தீவுப் பயணம்!
CINEMA SPICE RATING: ★★★ (3/5)