ஒரு பிரம்மாண்டமான மாளிகை, அதற்குள் வசிக்கும் ஒரு பணக்கார குடும்பம், அந்த குடும்பத்திற்குள் இருக்கும் இருண்ட ரகசியங்கள் – இதுதான் சைக்காலஜிக்கல் த்ரில்லர் படங்களின் வழக்கமான ஃபார்முலா. அதை சற்றே தற்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் பால் ஃபீக்.
மரண தண்டனையில் இருந்து பரோலில் வெளிவந்து, தங்குவதற்கு இடமும், வேலையும் இல்லாமல் தவிக்கும் மில்லி (சிட்னி ஸ்வினி) என்ற பெண்ணைச் சுற்றித்தான் கதை நகர்கிறது. லாங் ஐலாண்டில் உள்ள ஒரு மிகப்பெரிய மாளிகையில் வேலைக்காரியாக சேருகிறாள் மில்லி. அந்த வீட்டின் உரிமையாளரான நினா வின்செஸ்டர் (அமேண்டா செய்ஃபிரைட்) அவளை வேலைக்கு சேர்க்கிறாள். நினாவின் கணவர் ஆண்ட்ரூ (பிராண்டன் ஸ்க்லெனார்) மற்றும் மகள் சீசி ஆகியோருடன் அந்த வீட்டில் மில்லி வாழத் தொடங்குகிறாள். ஆனால், அவளுக்கு கொடுக்கப்படும் மேல்மாடி அறை, வெளியிலிருந்து பூட்டக்கூடிய வகையில் இருப்பது அவளுக்கு ஆரம்பத்திலேயே ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது.
நடிப்பும் திரைக்கதையும்
படத்தின் முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாக நகர்கிறது. நினாவின் விசித்திரமான குணம், திடீர் கோபம் மற்றும் மில்லியை அவள் நடத்தும் விதம் ஆகியவை பார்ப்பவர்களை கதையோடு ஒன்ற வைக்கின்றன. நினா ஒரு மனநல காப்பகத்தில் இருந்தவள் என்ற பின்னணி கதையை இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது. இந்த சூழ்நிலையில், நினாவின் கொடுமைகளில் இருந்து மில்லியை காப்பாற்றும் ஒரு ஹீரோவாக ஆண்ட்ரூ வருகிறான். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால், இடைவேளைக்கு பிறகு வரும் திருப்பங்கள் கதையை தலைகீழாக மாற்றுகின்றன. நினா வில்லி அல்ல, உண்மையான வில்லன் ஆண்ட்ரூ தான் என்பது தெரியவருகிறது.
நடிப்பைப் பொறுத்தவரை, அமேண்டா செய்ஃபிரைட் ஒட்டுமொத்த படத்தையும் தன் தோளில் தாங்குகிறார். ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாகவும், பின்னர் ஒரு தந்திரமான மனைவியாகவும் அவரது நடிப்பு மிரட்டல். ஆனால், சிட்னி ஸ்வினி இந்த கதாபாத்திரத்திற்கு செட் ஆகவில்லை என்றே தோன்றுகிறது. சிறையில் இருந்து வந்த ஒரு பெண்ணிற்குரிய முதிர்ச்சியோ அல்லது பயமோ அவரது முகத்தில் இல்லை. ஆண்ட்ரூவாக நடித்த பிராண்டன் ஸ்க்லெனார் ஒரு கொடூரமான வில்லனுக்குரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டார்.
பலம் மற்றும் பலவீனம்
படத்தின் பிரம்மாண்டமான பின்னணி, ஆடம்பரமான உடைகள் மற்றும் அமேண்டாவின் நடிப்பு ஆகியவை படத்திற்கு பெரிய பலம். குறிப்பாக சில வன்முறை காட்சிகள் (பற்களை பிடுங்குவது, கத்தியால் கீறுவது) த்ரில்லர் ரசிகர்களுக்கு பிடிக்கும்.
இருப்பினும், படத்தின் வசனங்கள் மிகவும் செயற்கையாக இருக்கின்றன. இயக்குனர் பால் ஃபீக் பொதுவாக காமெடி படங்களை இயக்குவதில் வல்லவர். இந்த த்ரில்லர் ஜானரில் அவர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தில் பல லாஜிக் குறைபாடுகள் உள்ளன. கதையின் திருப்பங்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும், அவை ஏன் நடக்கிறது என்பதற்கான காரணங்கள் வலுவாக இல்லை. மொத்தத்தில், ‘தி ஹவுஸ்மெய்ட்’ ஒருமுறை பார்க்கக்கூடிய, சுமாரான சைக்காலஜிக்கல் த்ரில்லர் திரைப்படம்.
CINEMA SPICE RATING: ★★★ (3/5)