‘ஜாமா’ போன்ற அழுத்தமான படைப்பிற்குப் பிறகு, இயக்குநர் மற்றும் நடிகர் பாரி இளவழகன் முற்றிலும் மாறுபட்ட, இலகுவான ஒரு காதல் மற்றும் குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக இந்த ‘அன்பே டயானா’ படத்தை இயக்கியுள்ளார். வடசென்னையின் பெரம்பூர் பின்னணியில், வெவ்வேறு கலாச்சாரப் பின்புலம் கொண்ட இருவருக்குள் மலரும் காதலையும், அதைச் சுற்றி நடக்கும் குடும்ப களேபரங்களையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கதையின் நாயகன் சிருமாமில்லா சீதா கிருஷ்ணா என்கிற CSK (பாரி இளவழகன்), அரசு வேலைக்குச் செல்லாமல் தடகளப் பயிற்சியாளராக இயங்கி வருபவர். அவரது வீட்டில் தாய் சரளா (ரோஜா செல்வமணி) தனது தெலுங்கு பாரம்பரிய பெருமையையும், கடுமையான குடும்பக் கட்டுப்பாடுகளையும் தீவிரமாகப் பின்பற்றுபவர். தந்தை பாஸ்கர் (சேத்தன்) மகனுக்கு உற்ற தோழனாக, ஜாலியான ரயில்வே ஊழியராக வலம் வருகிறார். இந்த சூழலில், சுட்டித்தனமும் தன்நம்பிக்கையும் கொண்ட ஆங்கிலோ-இந்தியப் பெண் மேஜிக் கொன்சால்வஸ் (ரம்யா ரங்கநாதன்) மீது சீதா கிருஷ்ணாவுக்குக் காதல் மலர்கிறது. இருவேறு கலாச்சாரம், தாயின் சாதியப் பிடிவாதம் மற்றும் கதாநாயகனின் தயக்க சுபாவம் ஆகியவற்றைத் தாண்டி இக்காதல் எவ்வாறு கரையேறுகிறது என்பதே கலகலப்பான மீதிக்கதை.
படத்தில் மிக முக்கியமான பலம் அதன் நகைச்சுவை தருணங்களும், இறுதிக்கட்ட 30 நிமிட கலாட்டாக்களுமே ஆகும். 90-களின் கிரேஸி மோகன் பாணி நகைச்சுவை நாடகங்களை நினைவூட்டும் வண்ணம், திருமண மண்டபத்தில் நடக்கும் குழப்பங்களும் திருப்பங்களும் திரையரங்கைச் சிரிக்க வைக்கின்றன.
நாயகியாக நடித்துள்ள ரம்யா ரங்கநாதன் தனது துடிப்பான நடிப்பால் படத்திற்குப் புத்துணர்ச்சி சேர்க்கிறார். நாயகன் பாரி இளவழகன் ஒரு சராசரி நடுத்தரக் குடும்பத்து இளைஞனின் பயத்தையும் காதலையும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். தந்தையாக வரும் சேத்தன் தனது டைமிங் காமெடியால் கவர்கிறார். தாயாக ரோஜா செல்வமணி தனது கம்பீரமான நடிப்பை மீண்டும் பதிவு செய்துள்ளார். ‘பெங்களூரு பாபா’வாக வரும் ‘பரிதாபங்கள்’ கோபி, ஆங்காங்கே வீசும் கவுண்ட்டர்கள் சிரிப்பலைகளை அள்ளுகின்றன.
பரத் சங்கரின் இசையும், ஷெல்லி காலிஸ்டின் வண்ணமயமான ஒளிப்பதிவும் பெரம்பூரின் அழகை நேர்த்தியாகப் படம் பிடித்துள்ளன. சில இடங்களில் பழைய திரைக்கதை அமைப்புகள் எட்டிப்பார்த்தாலும், எவ்வித மிகையுமின்றி ஜாலியான ஒரு ஃபீல்-குட் திரைப்படமாக முடிவதில் ‘அன்பே டயானா’ ரசிகர்களுக்கு ஒரு சிறந்த திரையரங்க அனுபவத்தைத் தருகிறது.
CINEMA SPICE RATING: ★★★½ (3.5/5)