பொதுவாக நமது சமூகத்தில் திருமண ஏற்பாடுகள் என்பது மணமக்களின் விருப்பங்களை விட குடும்பங்களின் கௌரவப் போராட்டமாகவே பல நேரங்களில் மாறிவிடுகிறது. வளர்ந்து வரும் பிள்ளைகளை திடீரென முதிர்ச்சியடைந்தவர்களாகக் கருதி திருமண பந்தத்தில் தள்ளிவிடும் முறையை மையமாக வைத்து, கலகலப்பும் எமோஷனும் நிறைந்த அருமையான திரைக்கதையை அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி.
துபாயிலிருந்து ஊர் திரும்பும் மருதநாயகத்திற்கு தற்போதைக்குத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லை. ஆனால் குடும்பத்தினரின் வற்புறுத்தலால் வேறு வழியின்றி திருமணத்திற்குச் சம்மதிக்கிறார். மறுபுறம், தான் ஆசைப்பட்ட காதலனுடன் இணைய முடியாமல் குடும்பத்தின் கட்டாயத்தால் மணமேடை ஏறுகிறார் முத்துச்செல்வி. இருவருக்கும் துளியும் உடன்பாடில்லாத இந்தத் திருமணம் தடபுடலாக நடந்து முடிகிறது. திருமணமான அன்றைய முதல் இரவிலேயே, தான் தன் காதலனுடன் ஓடிப்போகத் திட்டமிட்டிருப்பதை மருதுவிடம் கூறுகிறார் முத்துச்செல்வி. அதைக் கேட்டு ஆத்திரப்படாமல், நிதானமாக யோசிக்கும் மருது, அவளை அவளது காதலனிடம் பத்திரமாகச் சேர்த்து வைக்க முடிவெடுக்கிறார். இவர்கள் இருவருடன் ஒரு சாமியாரும் இணைந்து கொள்ள, அந்த நள்ளிரவில் நிகழும் அடுத்தடுத்த கலாட்டாக்கள் தான் இந்த படத்தின் கதைக்களம்.
நாயகன் ரிஷிகாந்த் இந்த படத்தின் மூலம் கதையின் நாயகனாகத் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார். தன்னைச் சுற்றியுள்ள அனைவரும் பதற்றத்திலும் கூச்சலிலும் இருக்கும் போது, மிகவும் அமைதியாகவும் நிதானமாகவும் தனது உடல்மொழியை வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்குத் தேவையான நியாயத்தைச் செய்திருக்கிறார். மனைவியின் நிலையைப் புரிந்து கொண்டு அவளுக்கு உதவ நினைக்கும் முதிர்ச்சியான இளைஞனாக இவரது நடிப்பு வெகுவாகக் கவர்கிறது.
முத்துச்செல்வியாக நடித்திருக்கும் அனிஷ்மா அனில்குமார், உணர்ச்சிகளின் கலவையாகத் தோன்றி அசத்தியிருக்கிறார். திருமணத்தில் விருப்பமில்லாத இறுக்கம், காதலனின் அலட்சியத்தால் ஏற்படும் கோபம், கணவனை எதிர்பாராமல் ‘ப்ரோ’ என்று அழைத்துவிடும் அப்பாவித்தனம் என அனைத்திலும் தனித்துத் தெரிகிறார். குறிப்பாக, தனது இளம் வயது கனவுகளும் ஆசைகளும் குடும்பக் கட்டுப்பாடுகளால் எப்படிப் பறிபோயின என்பதை அவர் கண்ணீருடன் கொட்டித் தீர்க்கும் உணர்ச்சிப்பூர்வமான காட்சி, ரசிகர்களின் மனதைத் தொடுகிறது.
காதலன் கதாபாத்திரத்தில் கதையின் இயக்குநரான ராஜா கருப்பசாமியே நடித்திருக்கிறார். பஞ்சரான வண்டி, கை கொடுக்காத நண்பர்கள், கையில் இல்லாத பணம் என ஒவ்வொரு திருப்பத்திலும் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் தியேட்டரில் சிரிப்பலையை ஏற்படுத்துகின்றன. திருமணத்திற்கான பொறுப்புகளையும் வாழ்க்கையின் எதார்த்தத்தையும் உணராமல் காதலில் விழும் இன்றைய தலைமுறையின் நிலையை இவரது கதாபாத்திரம் நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டுகிறது.
பகவதி பெருமாள், சேத்தன், அப்துல் லீ, ஏ. வெங்கடேஷ் எனப் படத்தில் வரும் ஒவ்வொரு துணைக் கதாபாத்திரமும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக திருமண வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன சண்டைகள், மது அருந்தச் செல்லும் ஆண்களின் உரையாடல்கள், பெண்களின் கிசுகிசுக்கள் என கிராமத்துத் திருமண வீட்டின் அத்தனை இயல்புகளையும் திரைக்கதையில் உயிர்ப்புடன் கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பரஞ்சோதி, இரவு நேரக் காட்சிகளை இருளின் தன்மையும் அழகும் கெடாமல் நேர்த்தியாகப் படமாக்கியுள்ளார். விளக்குகளின் வெளிச்சத்திலும் நிலவொளியிலும் காட்சிகள் யதார்த்தமாகப் பதிவாகியுள்ளன. இசையமைப்பாளர் பரத் சங்கரின் பாடல்களும் பின்னணி இசையும் கதையின் ஓட்டத்திற்குப் பக்கபலமாக அமைந்து, கொண்டாட்டத்திற்கும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களுக்கும் கூடுதல் வலிமை சேர்க்கின்றன.
குடும்பங்களில் பெண்கள் சந்திக்கும் அடக்குமுறைகள், சாதிய மனப்பான்மைகள் மற்றும் போலி கௌரவங்கள் ஆகியவற்றை எவ்வித பிரச்சார நெடியுமின்றி காட்சிகளின் மூலமாக நுட்பமாகப் பேசியிருப்பது இயக்குநரின் எழுத்துத் திறமையைக் காட்டுகிறது. இரண்டாம் பாதியில் சில இடங்களில் உரையாடல்களின் நீளம் சற்று அதிகமாக இருந்தாலும், படத்தின் கலகலப்பான போக்கும் இறுதிக்கட்ட காட்சிகளும் அந்தச் சிறு குறைகளை மறக்கடித்து விடுகின்றன. மொத்தத்தில் ‘மொத ராத்திரி’ என்பது குடும்பத்துடன் திரையரங்கிற்குச் சென்று மனம் விட்டுச் சிரித்து மகிழக்கூடிய ஒரு தரமான திரைப்பட அனுபவம்.
CINEMA SPICE RATING: ★★★★ (4/5)