தமிழ் திரையுலகில் தொடர்ச்சியான வெற்றிகளை குவித்து தன் ஆதிக்கத்தை ஆழமாக நிலைநிறுத்தி வருகிறது பிரபல தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ். திரைப்பட வணிகத்தில் ரசிகர்களின் மனநிலையை மிகச் சரியாக கணித்து செயல்படும் இந்நிறுவனம், அண்மையில் தொடர்ச்சியாக மூன்று பிரம்மாண்ட வெற்றிகளைப் பதிவு செய்து ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. தற்போது இன்பன் உதயநிதி தலைமையில் இயங்கும் இந்த நிறுவனம், அந்த தொடர் வெற்றியின் நீட்சியாக நடிகர் சூரி முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையையும் அதிகாரப்பூர்வமாகக் கைப்பற்றியுள்ளது.
கடந்த ஜூலை மாதத் தொடக்கத்தில் வெளியான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படமே இந்த வெற்றிக் கணக்கைத் தொடங்கியது. இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான இத்திரைப்படம் குடும்ப ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. முதல் பாகத்தின் புகழைத் தாண்டி, அனைத்து வயது ரசிகர்களையும் தியேட்டருக்கு வரவழைத்து அமோக வசூலை ஈட்டி தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பெரும் லாபத்தைப் பெற்றுத்தந்தது.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாகக் களமிறங்கிய டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ‘இதயம் முரளி’ படமும் எதிர்பாராத பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தது. இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான இக்காதல் காவியம், இளைஞர்களைப் பெருமளவில் ஈர்த்தது. டிக்கெட் முன்பதிவு தளங்களில் சில நாட்களிலேயே லட்சக்கணக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து, வர்த்தக வட்டாரத்தில் ‘முழுமையான பிளாக்பஸ்டர்’ என்ற பாராட்டைப் பெற்றது.
இந்த ஹாட்ரிக் பயணத்தின் உச்சக்கட்டமாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘டிசி’ (DC) திரைப்படம் உலகளவில் வசூல் மழை பொழிந்தது. முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நாயகனாக அவதாரம் எடுத்து நடித்த இத்திரைப்படத்தில் வாமிகா கபி ஜோடியாக நடித்திருந்தார். அனிருத்தின் இசையமைப்பில் உருவான இந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படம், உலகம் முழுவதும் ₹100 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக் குவித்து விநியோக நிறுவனத்திற்கு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது.
வெற்றிப்பயணம் இத்துடன் நின்றுவிடாமல், ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியான கவின் – நயன்தாரா கூட்டணியின் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டையும் ரெட் ஜெயன்ட் மேற்கொண்டது.
தற்போது அடுத்த நகர்வாக, ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் எல்ரெட் குமார் வழங்க, மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் திரைக்குக் கொண்டுவருகிறது. விடுதலை படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிகர் சூரி நடித்துள்ள இந்த விளையாட்டுக் கள பின்னணி கொண்ட கடல்சார் ஆக்ஷன் படத்தில், சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை சரியான முறையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதே ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் இந்த தொடர் வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.