Site icon Cinema Spice Entertainment

எஸ்.யு. அருண்குமார் – கமல் இணையும் ‘சண்டியர்’: தலைப்புக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு

kamal-haasan-sandiyar-movie-announcement-poster

தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு எதிர்பாராத மாபெரும் விருந்தளித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். இயக்குனர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிப்பில் அவர் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ என்று அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. ‘துப்பாக்கியின் 6 தோட்டாக்கள், இரக்கமற்ற பழிவாங்கல்’ என்ற அதிரடி குறிப்புடன் வெளியான போஸ்டர்கள் இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.

அனிருத் இசையமைப்பில், அன்பறிவ் சண்டை இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு உடனடியாகத் தொடங்கியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. வயதான முரட்டுத் தோற்றம், ரத்தக்கறை படிந்த கார் கதவு, தீவிரமான கண்கள் என போஸ்டரிலேயே மிரட்டியுள்ளார் கமல். மேலும் ஒரு போஸ்டரில், ஆயுதம் ஏந்திய கமலின் நிழலில் கையில் சிலேட்டு பலகையுடன் நிற்கும் ஒரு சிறுவனின் படம் இடம்பெற்று, ஆழமான பழிவாங்கும் கதையம்சத்தை உணர்த்துகிறது.

ஆனால், தலைப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே தீவிர அரசியல் எதிர்ப்பும் வெடித்துள்ளது. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ‘சண்டியர்’ படத்திற்கு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “சண்டியர் திரைப்படம் நிச்சயம் தொடங்கப்படக் கூடாது; பதில் சொல்ல வேண்டிய இடத்தில் கமல் உள்ளார். எம்.பி. ஆக ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராக அவர் செயல்படுகிறார்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

2003-ஆம் ஆண்டிலும் இதே ‘சண்டியர்’ என்ற தலைப்பில் கமல் படத்தைத் தொடங்கியபோது கடும் அரசியல் சர்ச்சைகள் கிளம்பின. சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி எழுந்த எதிர்ப்புகளால், பின்னர் அப்படத்தின் பெயரை ‘விருமாண்டி’ என மாற்றி வெளியிட்டு பெரும் வெற்றியைப் பெற்றார் கமல். சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அதே தலைப்பை கமல் கையில் எடுத்திருப்பது கோலிவுட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version