இந்திய திரையுலகில் பிரம்மாண்டம் என்ற சொல்லுக்கு இலக்கணமாகத் திகழும் இயக்குநர் எஸ். ஷங்கர், மற்றொரு திரைப்படத்தின் காட்சி அமைப்புகளைப் பாராட்டினால் அது இயல்பாகவே தலைப்புச் செய்தியாக மாறும். நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படைப்பான ‘ராமாயணம்’ திரைப்படத்தின் காட்சிகளைப் பார்த்து வியந்து இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பாராட்டு மழை பொழிந்திருந்தார். ஆனால், அந்த பாராட்டைத் தொடர்ந்து இணையத்தில் எழுந்துள்ள நகைச்சுவையான மற்றும் சுவாரசியமான விவாதங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இயக்குநர் ஷங்கர் தனது பதிவில், தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா மற்றும் இயக்குநர் நிதேஷ் திவாரியின் கூட்டு முயற்சியை மனதாரப் பாராட்டியுள்ளார். இந்திய சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தியிருப்பதாகவும், படத்தின் அசாத்திய கணினி வரைகலை (VFX), தயாரிப்பு தரம், ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மரின் பிரம்மாண்ட இசை ஆகியவை பிரமிக்க வைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் ராவணனாக நடித்திருக்கும் நடிகர் யஷின் திரை ஆளுமையையும், நாயகன் ரன்பீர் கபூர், சாய் பல்லவி உள்ளிட்ட படக்குழுவினரையும் வாழ்த்தித் தள்ளினார்.
இருப்பினும், அவரது பதிவில் இடம்பெற்றிருந்த “இந்திய சினிமாவில் இதுவரை பார்த்திராத காட்சிகள்” என்ற ஒற்றை வரிதான் இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஏனெனில், தமிழ் மற்றும் இந்திய சினிமாவில் சிஜிஐ மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பங்களை முதன்முதலில் உச்சத்திற்கு கொண்டு சென்ற முன்னோடியே ஷங்கர்தான். இதனால் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த புன்னகையோடு களமிறங்கிய நெட்டிசன்கள், “சார், நீங்க யார்னு உங்களுக்கு மறந்து போச்சா? நீங்கதானே இந்த பிரம்மாண்டங்களின் குரு!” என்று பதிவிடத் தொடங்கினர். ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ், அந்நியன், எந்திரன், ஐ, மற்றும் 2.0 போன்ற திரைப்படங்களின் திருப்புமுனைக் காட்சிகளைப் பகிர்ந்து அவரை நினைவூட்டி வருகின்றனர்.
குறிப்பாக, ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் உருவான ‘2.0’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பக்ஷி ராஜன்’ செல்போன் பறவை காட்சிகளையும், ‘ராமாயணம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ராட்சத பறவை காட்சிகளையும் ஒப்பிட்டுப் பல புகைப்படங்களும் மீம்களும் பகிரப்பட்டு வருகின்றன. சுமார் 250 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் இப்போது உருவாகும் படங்களுக்கு இணையாக, பல ஆண்டுகளுக்கு முன்பே 82 மில்லியன் டாலர் செலவில் நம்பமுடியாத காட்சிகளை உருவாக்கியவர் ஷங்கர்தான் என்பதை ரசிகர்கள் அழுத்தமாகக் கூறி வருகின்றனர்.
மற்றொரு இயக்குநரின் உழைப்பைப் பாராட்டிய ஷங்கரின் பெருந்தன்மையை ஒருபுறம் ரசிகர்கள் மெச்சினாலும், இந்திய சினிமாவிற்கு காட்சி விருந்தைப் பழக்கப்படுத்திய மூலவரான அவரை ரசிகர்கள் தங்களது நினைவடுக்கில் இருந்து ஒருபோதும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்பதையே இந்த இணைய விவாதம் தெளிவாக உணர்த்துகிறது.