இந்தியாவின் ‘மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் பிரபாஸ் நடித்துள்ள தி ராஜா சாப் திரைப்படம், வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காட்டுத்தீயாகப் பரவியுள்ளது.
இந்த எதிர்பார்ப்பைக் கையாளுவதற்காக, ஜியோஹாட்ஸ்டார் நிறுவனம் தனது சர்வர் திறனை கணிசமாக உயர்த்தியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் ‘Remind Me’ பொத்தானை அழுத்தி வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ரசிகர்களின் இந்த அதீத அன்பிற்குப் பதிலளிக்கும் விதமாக, படத்தில் கூடுதல் காட்சிகளைச் சேர்த்து “Extended Cut” ஆக வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
தொழில்நுட்ப கோளாறும்… கூடுதல் போனஸும்!
சில தவிர்க்க முடியாத காரணங்களாலும், தொழில்நுட்பக் கோளாறுகளாலும் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமத்தைப் போக்க, இந்தப் படத்தின் ‘எக்ஸ்டெண்டட் கட்’ பதிப்பை வழங்குவதாக ஜியோஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய போனஸ் செய்தியாக அமைந்துள்ளது.
“அதிகப்படியான எதிர்பார்ப்பால் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களுக்காக வருந்துகிறோம். அதற்கு ஈடாக, கூடுதல் காட்சிகளுடன் எக்ஸ்டெண்டட் கட்-ஐ சேர்த்துள்ளோம்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஹாரர் மற்றும் காமெடி கலந்த ஒரு கமர்ஷியல் எண்டர்டெய்னராக இந்தப் படம் இருக்கும் என்பதால், குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.