தென் சென்னை சினிமா ரசிகர்களுக்குப் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு முன்பாகவே ஒரு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது. சென்னை வேளச்சேரி உள்வட்டச் சாலையில் (Inner Ring Road) புதிதாக உருவாகியுள்ள ‘எக்ஸ்.பி மால்’ (XB Mall) வணிக வளாகம் வரும் டிசம்பர் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட உள்ளது. இந்த மாலின் முக்கிய சிறப்பம்சமாக, அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ‘பி.வி.ஆர் பி[எக்ஸ்.எல்]’ (PVR P[XL]) பிரம்மாண்டத் திரையரங்கம் அமையவுள்ளது.
வேளச்சேரி உள்வட்டச் சாலையில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள இந்த வணிக வளாகம், ஷாப்பிங், உணவு மற்றும் பொழுதுபோக்கு என அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து எக்ஸ்.பி மால் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பெரிய திரைகள், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மற்றும் மறக்க முடியாத பொழுதுபோக்கு அனுபவம் உங்களுக்காகக் காத்திருக்கிறது” என உற்சாகத்துடன் தெரிவித்துள்ளது.
சினிமா ரசிகர்கள் மத்தியில் PVR P[XL] திரையரங்குகளுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. வழக்கமான மல்டிபிளக்ஸ் திரைகளை விட மிகப் பெரிய சுவர் அளவிலான திரை (Extra-Large Screen), துல்லியமான 4K புரொஜெக்ஷன் மற்றும் இதயத்தை அதிர வைக்கும் சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) தொழில்நுட்பம் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். டிசம்பர் மாத இறுதியில் வெளியாகவுள்ள முன்னணி நட்சத்திரங்களின் பிரம்மாண்டத் திரைப்படங்களை இந்தப் புதிய திரையில் காண்பது ரசிகர்களுக்குப் புதுவித அனுபவமாக அமையும்.
திரையரங்கம் மட்டுமின்றி, குடும்பத்துடன் வார இறுதி நாட்களைக் கழிப்பதற்கான சிறந்த இடமாகவும் எக்ஸ்.பி மால் உருவெடுத்துள்ளது. வெளியாகியுள்ள மாலின் மாதிரிப் புகைப்படங்களில் வெஸ்ட்சைட் (Westside) போன்ற முன்னணி ஆடை நிறுவனங்களும், கே.எஃப்.சி (KFC), பர்கர் கிங் (Burger King), இஸ்தாரா (Isthara) உள்ளிட்ட பிரபல உணவகங்களும் இடம்பெற்றுள்ளன.
வேளச்சேரி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் மற்றும் கிண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, போக்குவரத்து நெரிசலைத் தாண்டி நகரின் மையப்பகுதிக்குச் சென்று படம் பார்ப்பது சவாலான விஷயமாக இருந்து வருகிறது. இந்நிலையில், வேளச்சேரி உள்வட்டச் சாலையிலேயே அதிநவீன பி.வி.ஆர் மல்டிபிளக்ஸ் திறக்கப்படுவது தென் சென்னைவாசிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் டிசம்பர் மாதம் திறப்பு விழா காணவுள்ள இந்தப் புதிய பொழுதுபோக்கு மையம், சென்னையின் சினிமா கலாச்சாரத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.