மும்பை தார்டியோவில் உள்ள வில்லிங்டன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் கடந்த வாரம் நடைபெற்ற PETA இந்தியாவின் ஆண்டு விழாவில், பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதில் மிகவும் முக்கியமான நிகழ்வாக, தேசிய விருது பெற்ற நடிகை ரவீனா டாண்டன் PETA இந்தியாவின் “கௌரவ இயக்குநராக” நியமிக்கப்பட்டார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விலங்குகளுக்காக குரல் கொடுத்து வரும் ரவீனா, ஜான் ஆபிரகாமுக்கு பிறகு இந்த உயரிய பதவியைப் பெறும் இரண்டாவது இந்தியர் ஆவார். இது குறித்து அவர் கூறுகையில், “இந்த கௌரவம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க நான் தொடர்ந்து பாடுபடுவேன்” என்றார்.
பிரபல ‘அனுபமா’ தொடரின் நாயகி ரூபாலி கங்குலி, கல்கத்தாவில் குதிரை வண்டிகளைத் தடை செய்யப் போராடியதற்காகவும், தெரு நாய்களைத் தத்தெடுப்பதை ஊக்குவித்ததற்காகவும் “மனிதாபிமான விருது” (Humanitarian Award) வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேடையில் பேசிய அவர், “விலங்குகள் பேச முடியாத அப்பாவிகள், அவர்களுக்கு நாம் தான் துணையாக இருக்க வேண்டும்” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
மேலும், வழிபாட்டுத் தலங்களில் உண்மையான யானைகளுக்குப் பதில் இயந்திர யானையைப் பயன்படுத்த முன்வந்த இரிஞ்சாடப்பில்லி ஸ்ரீ கிருஷ்ணா கோயிலின் அர்ச்சகர் ராஜ்குமார் என்பவருக்கு “கருணைமிக்க தலைமைத்துவ விருது” வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற மற்றொரு விழாவில், நகை வடிவமைப்பாளர் ராகுல் லுத்ரா மற்றும் நகைச்சுவை நடிகர் ஜீவேஷு அலுவாலியா ஆகியோரும் விருதுகளைப் பெற்றனர்.
இந்த விழா, விலங்குகளும் நம்மைப் போலவே உணர்ச்சியுள்ள உயிரினங்கள் என்பதையும், அவற்றை நாம் வதைக்கக் கூடாது என்பதையும் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.