தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று கதையின் நாயகனாக முத்திரை பதித்து வருபவர் நடிகர் சூரி. வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்திற்குப் பிறகு அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில், தனது 7-வது படத்திற்காக ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ போன்ற படங்களை இயக்கிய திறமைமிக்க இயக்குனர் ஆர். ரவிக்குமாருடன் சூரி இணைந்துள்ளார்.
இது குறித்து சூரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், “இந்தியாவின் மிகச்சிறந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் எனது அடுத்த திட்டத்தைப் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள் ஒய். ரவி சங்கர் மற்றும் நவீன் யெர்னேனி ஆகியோருக்கு தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
கதைக்களம் என்ன?
இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. போஸ்டரில் “BLOOD FOLLOWED THE FLOOD” (வெள்ளத்தைத் தொடர்ந்து ரத்தம் வந்தது) என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும், பின்னணியில் டிசம்பர் 2015 காலண்டர் காட்டப்பட்டுள்ளது. இது 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட கோரமான பெருவெள்ளத்தை மையமாக வைத்து படம் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கையில் அரிவாளுடன், இடுப்பளவு தண்ணீரில் சூரி நிற்பது போன்ற காட்சி, இது ஒரு சீரியஸான ஆக்ஷன் டிராமாவாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. விண்வெளி மற்றும் காலப்பயணம் சார்ந்த கதைகளை இயக்கிய ரவிக்குமார், முதன்முறையாக ஒரு யதார்த்தமான வாழ்வியல் போராட்டத்தை கையில் எடுத்துள்ளது சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் 3-வது தமிழ் படமான இதில் சூரியின் அர்ப்பணிப்பு மற்றும் நேர்மை இந்த பயணத்தை சிறப்பாக்கும் என இயக்குனர் ரவிக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.